×

ஜப்பானில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கியது

* ரூ.128 கோடி செலவில் 6 ஏக்கரில் அமைகிறது
* 2 மாதத்துக்கு முன்பாக முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ‘ஓம்ரான் ஹெல்த்கேர்’ நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை நிறுவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 30.5.2023ல் டோக்கியோவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் தொழில்துறை ஆட்டோமேஷன், ஹெல்த்கேர், மின்னணு பாகங்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. ஓம்ரான் கார்ப்பரேஷனின் ஒரு பிரிவான ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம், டிஜிட்டல் ரத்த அழுத்த மானிட்டர்கள், சுவாச சிகிச்சைக்கான நெபுலைசர்கள் உற்பத்தியில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம், குறைந்த அதிர்வெண் வலி சிகிச்சை உபகரணங்கள், மின்னணு வெப்பமானிகள், உடல் அமைப்பு மானிட்டர்கள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கும் இடையே, ரூ.128 கோடி முதலீட்டில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘ஓம்ரான் நிறுவனத்தின் முதலீடு, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. தமிழகம் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய தரமான மருத்துவ சேவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மருத்துவ துறைக்கான உற்பத்தி தொழிலை தொடங்குவதன் மூலம் எங்கள் மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஓம்ரான் நிறுவனம் முக்கிய பங்காற்ற இருக்கிறது. தங்களது முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்’’ என்று கூறினார். ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம், தமிழகத்தில் ரூ.128 கோடி முதலீட்டில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன்படி, தற்போது சென்னையின் புறநகரான கும்மிடிப்பூண்டியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற்பேட்டையில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர்களை தமிழகத்தில் இணைக்கும் வகையில் ஒரு உற்பத்தி அலகு ஒன்றை ரூ.128 கோடியில் 6 ஏக்கர் பரப்பளவில் துவங்கி உள்ளது. குறிப்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டு மாதத்தில் தனது தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்கும் பணியை 25ம் தேதி (நேற்று முன்தினம்) ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் பூமிபூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த தகவலை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

The post ஜப்பானில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Omron Healthcare ,Japan ,Chief Minister ,Chennai ,Dinakaran ,
× RELATED மாநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வால்...